×

அரிமளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

திருமயம்,ஏப்.5: அரிமளம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்சியில் 12 மாடுகள் கலந்து கொண்ட நிலையில் 10 மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 மாடுகள் கலந்த கொண்டன. வடமாடு மஞ்சுவிரட்டுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த திடலில் ஒவ்வொரு மாடாக நீண்ட கயிற்றில் கட்டி களம் இறக்கினர்.

இந்த மாட்டை அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர் குழு களத்தில் இறக்கிவிடப்பட்டனர். ஒவ்வொரு மாட்டை அடக்க குழுவுக்கு தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாடுபிடிவீரர்கள் மாட்டை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து மாடுபிடி வீரர்களுக்கு ரூ.5001 உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் மாடு வீரர்கள் கையில் சிக்கவில்லை என்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவித்து மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில் கலந்து கொண்ட 12 மாடுகளில் 10 மாடுகளை வீரர்கள் அடக்கி பரிசு பெற்றனர். இதில் மாடு முட்டியதில் 3 மாடுபிடி வீரர்கள் லேசான காயமடைந்தனர். வடமாடு நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஓணாங்குடி இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post அரிமளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Vadamadu Manjuvirattu ,Arimalam ,Thirumayam ,Vadamadu Manjuvirattu competition ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்